கல்குவாரிக்கு ஆதரவாக அறிக்கை தயார் செய்வதாக புகார் தனியார் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்

புன்செய்புளியம்பட்டி: அரசு அதிகாரிகள் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கேட்ட நிலையில். கல்குவாரிக்கு ஆதரவாக, தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து, அறிக்கை தயார் செய்ய முயற்சி நடப்பதாக கூறி, தனியார் நிறுவன ஊழியர்களை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.


புன்செய் புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியின் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த டிச., 4ல், கோபி ஆர்.டி.ஓ., சிவானந்தம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் மற்றும் விவசாயிகள் கல்
குவாரி உரிமம் புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கணபதி நகர், குரும்பபாளையம் பகுதி விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்து கேட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தனியார் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கேட்ட நிலையில் கல்குவாரிக்கு ஆதரவாக தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து போலியாக அறிக்கை தயார் செய்ய முயற்சி நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Advertisement