சர்வதேச பிலிம் பேர் விழாவிற்காக தாகூர் கல்லுாரி ஆவணப்படம் தயாரிப்பு

சர்வதேச பிலிம் பேர் விழாவிற்காக, நகர வனமாக உருவாகியுள்ள லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி பற்றி ஆவணப்படம் தயாராகி வருகிறது.

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக் கல்லுாரியில் 4,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லுாரி 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 105 வகையான 4,000 மரங்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான செடிகள் வளர்க்கப்பட்டு நகர வனமாக (அர்பன் பாரஸ்ட்) உருவாகியுள்ளது.

இதனால் இங்கு 25 வகையான பட்டாம்பூச்சிகள் பல்வேறு வகையான பறவைகள் ஏராளமான அளவில் வந்து செல்கின்றன. அப்பகுதியில் நிலத்தடி நீர் வளமைக்கு இந்த வனம் பெரிதும் பங்காற்றுகிறது. இந்த நகர வனம் புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இந்த கல்லுாரி வளாகத்தை புதுச்சேரி சுற்றுலாத் துறை தங்கள் வெப்சைட்டில் பதிவிட்டு உள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடு சபை சார்பில், கல்வி வளாகங்களில் உள்ள நிலைத்தன்மை நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்து கடந்த ஆண்டு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் 2017ம் ஆண்டே தாகூர் கல்லுாரி நகர வனத்தை உருவாக்கி விட்டது. இதனை உலக அளவில் அறிய செய்யும் விதமாக சமுக ஆர்வலர்கள் சிலர் இந்த கல்லுாரி பற்றி ஆவணப்படம் (டாக்குமென்ட்ரி) தயாரித்து சர்வதேச 'பிலிம் பேர்' விழாக்களில் வெளியிட முயற்சி எடுத்துள்ளனர்.

அதையொட்டி நேற்று இயக்குனர் லட்சுமிகாந்த் பாரதி, கதை உருவாக்கம் இயக்குனர் சீனிவாசன், நிர்வாக தயாரிப்பாளர் உமாமகேஸ்வரி, ஒளிப்பதிவாளர் ஆனந்த், எடிட்டர் துரை மற்றும் காபி டேபிள் என்ற புத்தகத்தை வெளியிட உள்ள லயோலா கல்லுாரி மாணவி விஜய் மீனாட்சி, மாணவர் சாய்ராஜ் ஆகியோர் நேற்று கல்லுாரி வளாகத்தில் ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பை கல்லுாரி முதல்வர் சசிகாந்த் தாஸ் முன்னிலையில் படமாக்கினர்.

ஆவணப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்ததையும் படமாக்கினர். 15 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படத்தை விரைவில் சர்வதேச திரைப்பட விழாக்களில் காணலாம்.

Advertisement