ஆம்புலன்ஸ் பிரேக் டவுன் போக்குவரத்து பாதிப்பு
அரியாங்குப்பம்: ஆற்று பாலத்தில், ஆம்புலன்ஸ் டயர் கழண்டு நடுவில் நின்றதால், புதுச்சேரி - கடலுார் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி - கடலுார் சாலையில், நோணாங்குப்பம் ஆற்று பாலம் உள்ளது. இதில், மதியம் 1:30 மணியளவில் கடலுார் சாலை மார்க்கமாக ரிப்பேர் ஆன ஆம்புலன்ஸ் வாகனத்தை, டாடா ஏஸ் வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தது.
பாலத்தின் நடுவில், சென்ற போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் வீல் பேரிங் உடைந்து, பின் பக்க டயர் கழன்று கொண்டது. அதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில், வாகனங்கள் செல்ல முடியாமல், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன.
அங்கு நின்ற வாகனங்களை, பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்து போலீசார் திருப்பி விட்டனர். அதனை அடுத்து, மெக்கானிக்கை அழைத்து வந்து, சீர் செய்த பின், பாலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.