பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுக்காதீர்! முப்பெரும் விழாவில் வலியுறுத்தல்
போத்தனூர் : 'தினமலர்' நாளிதழ், இந்தியன் நீர்ப்பணிகள் சங்கம், எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் திருக்குறள் ஆய்வு கழகம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது.
கோவை, சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா கல்லூரி அரங்கில், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் குமாரசாமி தலைமையில் விழா நடந்தது. திருக்குறள் ஆய்வு கழக தலைவர் அன்வர் பாட்சா வரவேற்றார். எய்ம் அறக்கட்டளை அறங்காவலர் நாகராஜ் துவக்கவுரையாற்றினார்.
'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பாரம்பரிய முறைகளும், நவீன திட்டங்களும்' எனும் தலைப்பில், அறிவுரையாளர் லட்சுமண பெருமாள்சாமி பேசுகையில், ''நீர், நிலம், காற்று, நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூதங்களும் மாசடைந்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். மின் வாகன பயன்பாடு, காற்றாலை, சூரிய மின் சக்தி ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் இம்மாசினை குறைக்கலாம்,'' என்றார். 'நீர் வளங்கள் பாதுகாப்பில் பாரம்பரிய முறைகளும் நவீன திட்டங்களும்' எனும் தலைப்பில், தமிழ்நாடு நீராதார வளர்ச்சி குழும முன்னாள் தலைமை இன்ஜினியர் இளங்கோவன் பேசுகையில், ''ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ஆண்டும் தலா, 10 மரக்கன்றுகளை நட, உறுதி எடுக்க வேண்டும். பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்த விடக்கூடாது,'' என்றார்.
போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
இண்டேன் ஆயில், வி.ஆர்.வாட்டர் இன்ப்ரா நிறுவனம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம், ஜெ.ஆர். பில்டர்ஸ், ஸ்ரீ கலைவாணி கல்வியியல் கல்லூரி ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.
பொன்னாடை போர்த்தி பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பாக தமிழ் பணியாற்றும் உலக தமிழ்நெறி கழகத்தின் சிவலிங்கம், தொல்காப்பியர் தமிழ் சங்கத்தின் காளியப்பன், கவையன்புத்தூர் தமிழ் சங்கத்தின் கணேசன், கம்பன் கலை கூடத்தின் டாக்டர் சுப்ரமணியம், வசந்த வாசல் கவி மன்றத்தின் சண்முகம், கோவை முத்தமிழ் அரங்கின் சுப்பையா, அறம் அறிவு பட்டறையின் சாந்தலிங்கம், கனவு மெய்ப்பட படைப்பகத்தின் பிரபா, தமிழ் சங்கமம் காப்பு கூட்டியக்கத்தின் துரைசாமி, எய்ம் அறக்கட்டளையின் திருநாவுக்கரசு மற்றும் திருக்குறள் ஆய்வு கழகத்தின் அன்வர் பாட்சா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணி மேற்கொள்ளும், பத்து பேருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
திருக்குறள் ஆய்வு கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில், வென்ற (எட்டு முதல் 10 வகுப்பு) பொள்ளாச்சி, நாயக்கன்பாளையம், பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியின் கனித்கா, பீளமேடு, பி.எஸ்.ஜி., மேல்நிலை பள்ளியின் ஸ்ரீலட்சுமி, செல்வபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியின் துர்கா ஆகியோருக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் முறையே, ஏழாயிரம், ஐந்தாயிரம் மற்றும் மூன்றாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பிரிவில், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் நவுபியா, பாரதீய வித்யா பவன் பள்ளியின் ஜனுஷியா, வடகோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளியின் சச்சின் ஆகியோருக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் முறையே, 10 ஆயிரம், ஏழாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய், ரொக்கப் பரிசுடன் சான்றிதள் வழங்கப்பட்டது. மேலும் இரு பிரிவுகளிலும், நான்கு முதல் ஆறு வரையிலான இடங்களை பிடித்தவர்களுக்கு, திருக்குறள் ஆய்வு கழகம் சார்பில், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.