கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தியது 'டிட்கோ'

சென்னை: நம் நாட்டினர் விமான பயிற்சி பெற, வெளிநாடு செல்வதை தடுத்து, தமிழகத்திற்கு வரவழைக்க, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்கும் பணியை, 'டிட்கோ' வேகப்படுத்தி உள்ளது.


மத்திய அரசு, நாடு முழுதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், விமான சேவை பன்மடங்கு அதிகரிக்க உள்ளதால், விமானத்தை இயக்கும், விமானிகளின் தேவையும் அதிகரிக்கும்.


இந்தியாவில் சர்வதேச தரத்தில், விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதனால்,இந்தியாவில் இருந்து பலரும் விமான பயிற்சி பெற, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். இதற்காக, அதிகம் செலவிடுகின்றனர்.

இதை தவிர்க்கவும், விமான பயிற்சி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விமான பயிற்சி நிலையம் அமைக்க, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புதுார், தோணுகல் கிராமங்களில், அரசின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தனியார் நிறுவனம் விமான ஓடுதளம் அமைத்து உள்ளது.

இங்கு, பல ஆண்டுகளாக விமானம் இயக்கப்படவில்லை. அந்த இடத்தில், விமான பயிற்சி நிறுவனம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்குள்ள ஓடுதளத்தை பயன்படுத்தி, 10 பயிற்சி விமானங்கள் இயக்கலாம்.

இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, 'டிட்கோ' செய்து தர உள்ளது. இங்குள்ள ஓடுதளத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள்விமானம் இயக்க பயிற்சி தரலாம். கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க, ஆர்வமாக உள்ள நிறுவனங்களிடம் டிட்கோ விருப்பம்கேட்டது.


பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.தற்போது, விமான ஓடுதளம் போன்றவற்றுக்கு அடிப்படைஉள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.


இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியிலும், டிட்கோ ஈடுபட்டுள்ளது.


இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விமான பயிற்சி நிலையத்தை, ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக, சர்வதேச தரத்தில் விமான பயிற்சி, தமிழகத்திலேயே வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement