ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும்; ரெட்டி நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்
திண்டிவனம்,: திண்டிவனத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்திற்கு, ஓ.பி.ஆர்., பெயரை சூட்ட தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம் சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆரின், 130வது பிறந்தநாள் விழா மாநாடு, திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள ஓ.பி.ஆர்., மணிமண்டப வளாகத்தில் நேற்று நடந்தது.
திவான் பகதுார் சுப்பராயலு ரெட்டியார் அரங்கத்தில் நடந்த மாநாட்டை, தென்னிந்திய ரெட்டி நலச்சங்க தலைவர் முத்துமல்லா, தொழிலதிபர் ராஜ்மோகன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சென்னை முத்தமிழ்செல்வி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இளைஞரணி மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாநில தலைவர் ரவி, சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் மற்றும் சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை சூட்ட வேண்டும். ரெட்டி இன மக்களை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் ஓ.பி.ஆர்., முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். பொது வாழ்வு மற்றும் அரசு பணிகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஓ.பி.ஆர்., பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலர் ராஜா பூர்ணசந்திரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். முன்னதாக, மணிமண்டபத்தில் உள்ள ஓ.பி.ஆர்., சிலைக்கு மாநில தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.