கோவை மெட்ரோ ரயில் திட்டம்; நிலம் எடுக்க ரூ.154 கோடி ஒதுக்கீடு
சென்னை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்காக, 154 கோடி ரூபாயை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக, கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான 1.1 கிலோமீட்டர் நீளத்துக்கு, ரோட்டின் கிழக்குப்பகுதியில் நிலம் எடுக்கப்பட உள்ளது.
கோவையில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் 34.8 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. முதல் வழித்தடம் உக்கடம் பஸ் நிலையத்தில் துவங்கி, நகர விமான நிலையம் வழியாக நீலம்பூர் ஒருங்கிணைந்த நிலையம் வரை 20.4 கி.மீ தூரத்துக்கு அமைய உள்ளது.
இரண்டாவது வழித்தடம், ரயில் நிலையத்தில் துவங்கி சத்தி ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ., தூரம் வரை அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக நிலம் எடுப்பதற்காக, 154 கோடி ரூபாயை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான 1.1 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவில் மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி துவங்கும். இந்த பணியில் வருவாய் துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள்.
சத்தியமங்கலம் சாலையில் கணபதி என்ற இடத்தில் உள்ள டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை வரையிலான பகுதி மிக குறுகலாக இருக்கிறது. இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டெக்ஸ்டூல் பாலத்தில் சாலையை 3.1 கி.மீ தூரத்துக்கு விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த ரூ.54 கோடியை தேசிய நெடுஞ்சாலை துறை ஒதுக்கி உள்ளது.
அதே பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரே பகுதியில் பலமுறை நிலத்தை கையகப்படுத்த முடியாது. எனவே கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான 1.1 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்த முதல்கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதன் படி முதல்கட்டமாக ரூ.154 கோடியை அதிகாரிகள் ஒதுக்கி உள்ளனர்.
ரோட்டின் கிழக்குப்பகுதியில் நிலம் எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில திட்ட ஆய்வு பணி விரைவில் துவங்க உள்ளது. இதற்கு ரூ.2 கோடி ஒதுக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இதற்கும் நாங்கள் கேட்ட பணத்தை அதிகாரிகள் ஒதுக்கி உள்ளனர். இரண்டு வழித்தடங்களிலும் நில திட்ட ஆய்வு பணி செய்து, ஆய்வறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் சமர்ப்பிப்போம், என்றனர்.