நான் எப்படி ஐ.ஏ.எஸ்., ஆனேன் - ஜெயசீலன் ஜெயித்த கதை

மாணவர்கள் நலனில் கண்ணாக, அவர்களை முன்னேற்றத் துடிப்பவராக வலம் வருகிறார் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன். இதற்காக 2023ல் கல்விக்கும், 2024ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் சிறப்பாக பணிபுரிந்ததற்காக முதல்வர் ஸ்டாலினிடம் சிறந்த கலெக்டருக்கான விருதுகள் பெற்றுள்ளார்.

மாணவர்களுடன் கலந்துரையாட 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். திருக்குறள் மாநில மாநாடு, மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் என பல தரப்பட்ட உத்வேகத்தை அளிக்கிறார். தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த இவர் தமிழில் ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி வென்றவர்.

இவர் தனது ஐ.ஏ.எஸ்., பயணம் குறித்து அளித்த பேட்டி...

ஐ.ஏ.எஸ்., கனவு



7ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் குடிநீர் பிரச்னை. மக்கள் போராட்டம் செய்தனர். அங்கு வந்த சப் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகளின் செயல்பாடுகளில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என 10ம் வகுப்பில் முடிவெடுத்தேன். சமூக அறிவியல் ஆசிரியர் ஐ.ஏ.எஸ்., ஆவது பற்றியும், கலெக்டர் பணி பற்றியும் கூறுவார். அப்போது எனக்கு பொறி தட்டியது.

பிளஸ் 2 முடித்ததும் மதுரை வேளாண் கல்லுாரியில் சேர்ந்தேன். ஓய்வு ஐ.ஏ.எஸ்.,கள் இறையன்பு, சுப்புராஜ், ஐ.பி.எஸ்., சைலேந்திரபாபு வேளாண் கல்லுாரி முன்னாள் மாணவர்கள். பள்ளி, கல்லுாரிகளில் என் லட்சியம் ஐ.ஏ.எஸ்., என தெளிவாகி விட்டதால் இனி தீவிரமாக தயார் ஆவதென அப்போது முடிவெடுத்தேன்.

அம்மாவே ஆணிவேர்



என் தந்தை பழனிச்சாமி கூட்டுறவு கடன் சங்க செயலாளராக இருந்தார். சிறு வயதில் அரசு அலுவலகங்களுக்கு அழைத்து செல்வார். வங்கியில் படிவம் நிரப்புவது துவங்கி, அரசு சான்றுகள் வாங்குவது குறித்தெல்லாம் நேரடியாக அழைத்து சென்று விளக்குவார். தந்தை அறிவை ஊட்டினாலும் எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அம்மா தான். அவரின் கடுமையான உழைப்பில் தான் என்னுடைய கல்வியும், கனவுகளும் இந்த உயரத்தை அடைந்திருக்கின்றன.

கல்லுாரி முடித்தவுடன் குரூப் 2 தேர்வில் தேர்வானேன். கருவூலத்தில் கணக்காளராக கிடைத்தது. பணியில் சேர்ந்து என் இலக்கு இது இல்லை என முடிவானதும் விலகிவிட்டேன். மீண்டும் படிக்க துவங்கினேன். 2012ல் என்னுடைய 2வது முயற்சியில் ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்றேன். அகில இந்திய ரேங்க் 602 வந்தது. பணியில் சேர்ந்தேன். அடுத்த முயற்சியில் ஐ.ஏ.எஸ்., கிடைத்தது.

தமிழகத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் 45வது ரேங்கும் பெற்றேன். பயிற்சி முடித்து முதலில் விழுப்புரத்தில் உதவி கலெக்டர், செங்கல்பட்டில் சப் கலெக்டர், வீட்டு வசதி துறையில் துணை செயலாளர், துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனர், செய்தித்துறை இயக்குனர், தற்போது கலெக்டராக விருதுநகரில் உள்ளேன்.

தமிழ் வழியில் சாதித்தது



ஐ.ஏ.எஸ்., தேர்வு துவக்க நிலை, மெயின்ஸ், நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளை கொண்டது. துவக்க நிலை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இருக்கும். நுாறு கேள்விகளுக்கு 2 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் தான் தயாராக வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை அளித்து வெற்றி பெற ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ௨ம் நிலை தேர்வுகளை அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எழுதலாம். செய்தித்தாள்கள், நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள், முக்கிய பிரச்சினைகளை பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றை தொடர்ந்து படிக்க வேண்டும். தாய்மொழியில் எழுதும் போது கருத்தை ஆழமாக எழுத முடியும்.

நேர்முகத்தேர்வில் பயத்தை போக்க



எழுத்து தேர்வுக்கு 87 சதவீதம், நேர்முக தேர்வுக்கு 13 சதவீதம் மதிப்பெண். நேர்முகத்தேர்வு சினிமா கற்பிதங்களைப் போல் இருக்காது. இது உங்கள் ஆளுமை திறனுக்கான தேர்வு. முக்கியமான பதவிக்கு செல்கிறீர்கள். அங்கு வந்தவர்களில் நீங்கள் எவ்வளவு பக்குவமாக நியாயமாக செயல்படுகிறீர்கள் என பரிசோதிப்பதற்கான தேர்வு தான் அது. கேள்விகளில் சரி, தவறு என்பதை தாண்டி பதில் தெரியாத வேளையில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை கவனிப்பர்.

யு.பி.எஸ்.சி., உறுப்பினர் தலைமையில் நேர்முக தேர்வு நடக்கும். ஓய்வு ஐ.ஏ.எஸ்.,கள், முப்படை அதிகாரிகள், துணைவேந்தர்கள் போன்றோர் வருவர். உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி கூட வருவர். நேர்முகத்தேர்வு அரைமணி நேரம் நடக்கும். பயோ டேட்டாவை பார்த்து அதில் கேள்விகளை கேட்பர். எனக்கு விவசாயம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். மீதம் நாட்டு நடப்பு. ஒரு விஷயத்தை எந்த அளவில் நியாயமாக எதிர்கொள்கிறீர்கள் என்று பார்ப்பர்.

சிறுவர் மலர் படித்தேன்



எனது வாசிப்பு ஆரம்பம் தினமலர் சிறுவர் மலர் தான். அதன் பிறகு பல்வேறு நாளிதழ்களில் வரும் சிறப்பு பகுதிகளை விடாமல் படிப்பேன். கதைகளை படிப்பேன். வாரமலரில் குறுக்கெழுத்து போட்டியை முதலில் நிரப்பும் ஆளாக நானாக தான் இருந்தேன்.கவிஞர் வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரு பூக்களும், வைகறை மேகங்கள், என் பழைய பனையோலை கவிதைகள் என்ற மரபு கவிதை புத்தகங்கள் பிடித்து போயின. ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரை வாசித்தேன். சங்க இலக்கியம் கம்பராமாயணம் மீதும் ஆர்வம் அதிகரித்தது. அவ்வப்போது படைப்பிலக்கிய கவிதைகளை எழுதுவேன். இப்போதும் எழுத ஆர்வமிருக்கிறது. பணிச்சூழல்களால் தவிர்த்து விட்டேன். காலம் கனிகிற போது கவிதைகள் உள்ளிட்ட படைப்பு இலக்கியம், அனுபவங்களை தொடர்ந்து எழுத திட்டமிட வேண்டும்.

போட்டித்தேர்வுக்கு தயாராக டிப்ஸ்



நாம் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரங்களில் நமக்கு வயது மிக குறைவாகவும், அனுபவங்கள் மிக குறைவாகவும் இருக்கும். பிளஸ் 2வில் எடுக்கும் முடிவும், முயற்சியும், மீதமுள்ள 60 ஆண்டுகால வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும். பிளஸ் 2வில் முடியவில்லை என்றால் கல்லுாரி நாட்களில் முடியும். இல்லையென்றால் போட்டித்தேர்வு இருக்கிறது. என்ன செய்ய போகிறோம் என தெளிவான முடிவு வைத்து இலக்கு நிர்ணயம் செய்யாததால் அப்படியே நின்று விடுகின்றனர். நல்ல பின்புலம் இல்லை என தாழ்வாக நினைக்க கூடாது. தமிழ் ஆங்கிலத்தில் நன்கு பேசவும் எழுதவும் முயற்சிக்க வேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராவது பாறாங்கல்லை உடைப்பது போன்றது. நுாறு அடியில் உடைகிறது என்றால் 99 அடியோடு விட்டு விட்டு போய்விடுகின்றனர் பலர். வெற்றி பெற ஈடுபாடும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் அவசியம்.

Advertisement