மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திருச்சி: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் சாரண இயக்கத்திற்கு ரூ.10 கோடியில் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இல்லம் தேடி கல்வி திட்டம் வெற்றி. தமிழகத்திற்கு பெரும் புகழை ஈட்டித் தருகிறது பள்ளிக் கல்வித் துறை.
நாட்டுப்பற்று என்பது நிலத்தைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிடி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழகம் தான் முன்னிலையில் உள்ளது.
இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இந்திய நாடு ஒற்றுமையால் விடுதலை பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் அனைவரும் சமம் என்ற உணர்வோடு, ஒற்றுமையாக போராடியதால்தான் இந்த விடுதலை கிடைத்தது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்பொழுதும் விட்டுவிடக்கூடாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.