பெண் கலெக்டர் திடீர் மாற்றத்தின் பின்னணி!

''அமைச்சர் கையை விரிச்சுட்டதால, கலக்கத் துல இருக்காங்க...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''என்ன விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஒரு கிடங்கில் பதுக்கி வச்சிருந்த, 28 டன் யூரியா உர மூட்டைகளை தனிப்படை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செஞ்சாங்க... உள்ளூர் தொழிலதிபர் உட்பட நாலு பேர் மேல வழக்கு பதிவு பண்ணி, தி.மு.க., பிரமுகர் ராஜ்குமார்னு ஒருத்தரையும் கைது செஞ்சாங்க...

''மத்திய அரசு, மானிய விலையில் வழங்கும் உர மூட்டைகளை விவசாயிகள் வாங்குறதுக்கு பல விதிமுறைகள் இருக்கு... கூட்டுறவு சங்கங்கள் வாயிலா தான் உரத்தை வாங்க முடியுமுங்க...

''ஆனா, ஒன்றிய தி.மு.க., புள்ளி ஏற்பாட்டுல வேளாண்மை, கூட்டுறவு துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு யூரியா மூட்டைகளை பதுக்கி வச்சிருந்தது தெரிஞ்சதுங்க...

''விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால, தன்னை காப்பாத்தும்படி மாவட்ட பெண் அமைச்சரிடம் ஒன்றிய புள்ளி போய் புலம்பியிருக்காரு... அவங்களோ, விவசாயிகள் விவகாரம் என்பதால கையை விரிச்சுட்டாங்க...

''இதனால, ஒன்றிய புள்ளியும், அவருக்கு உதவியா இருந்த அதிகாரிகளும் கலக்கத்துல இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''முருகேசன், தள்ளி உட்காரும்...'' என்ற படியே வந்த குப்பண்ணா, ''பத்து வருஷமா அசையாம இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார்.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை ஏர்போர்ட்ல ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார் நிறைய பேர் பணியில் இருக்கா... இவாள்ல நிறைய பேர், 10 வருஷமா இங்கயே ஒர்க் பண்றா ஓய்...

''அவாளை வேற எங்கயும் மாத்த மாட்டேங்கறா... இங்க வந்து காபி, டீ குடிச்சுண்டு, எந்த பிரச்னையும் இல்லாம நிம்மதியா வீட்டுக்கு கிளம்பிடறா ஓய்...

''இங்க வர்ற வி.ஐ.பி.,க் களுக்கு பணிவிடை பண்றதால, இவாளை மாத்தறதை பத்தி அதிகாரி களும் யோசிக்கறதே இல்ல... சில போலீசார், முக்கிய புள்ளிகள் சிபாரிசுல இந்த இடத்துலயே பெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கா...

''இதனாலயே, யாரையும் மதிக்காம அடாவடியா நடந்துக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கடும் அதிருப்தியால மாத்திட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாரை, எங்க மாத்தினாங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சமீபத்துல ஐ.ஏ.எஸ்., அதிகாரி களை மாத்தினாங்கல்லா... இதுல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவை, அரசு பொதுத்துறையின் நெறிமுறைகள் பிரிவு இணை செயலர் பதவிக்கு மாத்தியிருக்காவ வே...

''கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த சரயு, 2015ல தான் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றாங்க... விழுப்புரம், கடலுார், புதுக்கோட்டை மாவட்ட சப் - கலெக்டர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பதவிகள்ல இருந்தாங்க வே...

''கிருஷ்ணகிரி கலெக்டரா, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி தான் நியமிக்கப்பட்டாங்க... ஓசூர் விமான நிலைய நில எடுப்புல இவங்க ஆர்வம் காட்டல வே...

''அது சம்பந்தமா வந்த பைல்களை எல்லாம், பல கேள்வி கள் கேட்டு திருப்பி அனுப்பிட்டே இருந்திருக்காங்க... இதனால, அரசு மேலிடம் அதிருப்தியாகி தான், அவங்களை சென்னைக்கு மாத்திட்டதா வருவாய்த்துறை வட்டாரங்கள்ல பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement