இறந்தவர் உடலை பெற மறுப்பு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி சமரசம்

துாத்துக்குடி; வீடு ஜப்தி செய்யப்பட்டதால், விஷம் குடித்து இறந்தவர் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் சங்கரன், 45, அவரது மனைவி பத்திரகாளி, 43. தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் தவணையை திருப்பி செலுத்தாததால், இவர்கள் வீடு ஜப்தி செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதி போலீசார் முன்னிலையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தனர். இதில், சங்கரன் உயிரிழந்தார். பத்திரகாளி சிகிச்சை பெற்று வருகிறார்.

கோரிக்கை



சங்கரனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், கிராம மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி --- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அப்பகுதி கடைகள் அடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

வீட்டை ஜப்தி செய்த அப்டூஸ் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிய வேண்டும்; விஷம் குடித்த தம்பதியை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டின் மீதான ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; சங்கரன் குடும்பத்திற்க்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரனம் வழங்க வேண்டும்; அவரது குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் ரத்தினசங்கர், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில், முடிவு எட்டப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

நடவடிக்கை



தனியார் நிதி நிறுவனம், 10 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டது. ஜப்தி செய்த வீட்டின் சாவியையும், அந்தநிறுவன ஊழியர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.

அரசு வேலை தொடர்பாக கலெக்டர் வாயிலாக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், பத்திரகாளிக்கு விதவை சான்று உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

Advertisement