பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதை மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க, 2024ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினர். ஆனாலும், தமிழகத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.

அது சரி...'சரக்கு' விற்பனை செய்து, 50,000 கோடி ரூபாயை அள்ளிட்டு, போதை மீட்பு மையங்களுக்கு, 20 கோடியை கிள்ளிக் கொடுத்தால், 'குடி'மகன்கள் எண்ணிக்கை எப்படி குறையும்?


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: பாலாறு தடுப்பணை பணியை, ஒப்பந்ததாரர் தரமாக செய்ய வேண்டும். எதோ செய்தோம் என்று பணியை செய்யக் கூடாது. இந்த கல்வெட்டில் என் பெயரும் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இல்லை என்றாலும், பணி நன்றாக இருந்தால்தான், எங்கள் பெயர் நிற்கும்.
அட, 100 வருஷம் எல்லாம் பேராசை... 10 வருஷம் தாக்குப் பிடிச்சாலே பெரிய விஷயம்!

காட்டுமன்னார்கோவில் தொகுதி வி.சி., - எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் பேட்டி:
பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பது, பல்கலை நிர்வாகத்தை முடக்கும் செயலாகும். பல்கலை நிர்வாகத்தை முடக்கும் கவர்னர் ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


'பல்கலை நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் புகுந்துவிடக் கூடாது' என, கவர்னர் நினைப்பது தவறா?

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் அறிக்கை: தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்காக, பள்ளி மாணவர்களை நாற்காலிகளை துாக்கச் செய்துள்ளனர். மாணவர்கள், வேலை ஆட்கள் போல் பயன்படுத்தப்பட்டுள்ள நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கிறேன். படிக்கும் மாணவர்களை கல்வி கற்க விடாமல், அவர்களை வேலை ஆட்களாக பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.

'நமக்கு நாமே' திட்டத்தை அரசு பள்ளி ஆசிரியர்கள் இதில்தான் கடைப்பிடிக்கிறாங்ளோ?

Advertisement