காங்கிரசுக்கு அருகதை உண்டா?
ஆர்.சத்தியசீலன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹா கும்பமேளா
கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் பலியாகியுள்ளனர்; 60 பேர் காயமடைந்தது,
வருத்தப்பட வேண்டிய சம்பவம் தான்!
இதை, வாய் புளித்ததோ, மாங்காய்
புளித்ததோ என்ற ரீதியில், காங்கிரஸ் கட்சி, சகட்டு மேனிக்கு விமர்சிப்பது
அருவருப்பான அரசியலாக உள்ளது.
கடந்த 1954, பிப்., 3ம் தேதி பிரயாக்ராஜில், மவுனி அமாவாசைக்கு புனித நீராட குவிந்த மக்களில், 800 பேர் பலியாகியுள்ளனர்.
அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்., கட்சி; பிரதமராக இருந்தவர் ராகுலின் கொள்ளுப்பாட்டன் நேரு.
அடுத்து,
1986ல் உத்தரகண்டில் ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவின் போது ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி, 47 பேர் உயிரிழந்தபோது, ஆட்சியில் அமர்ந்து கோலோச்சியது,
ராகுலின் அப்பா ராஜிவ்.
கடந்த 2003ல் மஹாராஷ்டிராவின் நாசிக்கில் நடந்த கும்பமேளாவின் போது, நடந்த விபத்தில் 39 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்.
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது பா.ஜ., பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்!
காங்கிரஸ்
ஆட்சியை காட்டிலும், பா.ஜ., ஆட்சியின் போது பலியானோர் எண்ணிக்கை
குறைவுதான் என்று தி.மு.க., மாதிரி ஒப்பிட்டு சொல்லவில்லை.
ஆனால்,
நடந்த இந்த விபத்தை வைத்து, 'அரைகுறை ஏற்பாடுகள், சுய விளம்பர முயற்சிகள்,
வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே முன்னுரிமை போன்றவையே, அப்பாவி மக்கள்
பாதிக்கப்பட்டதற்கு காரணம். வி.ஐ.பி.,க்களை கவனிப்பதை விட்டு, உ.பி., அரசு
பக்தர்களை கவனிக்க வேண்டும்' என்று காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன
கார்கேவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கூறியுள்ளனர்.
மத்திய - மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்ட, காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமாவது அருகதை உண்டா?
திறமைசாலிகளுக்கு இடமில்லாமல் போகும்?
எஸ்.வெற்றிவேல், மணப்பாறை, திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வள்ளுவரை எவரும் கபளீகரம் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும்; தமிழ் மண்ணில் சமத்துவம் பேசிய வள்ளுவர், வள்ளலார் போன்றவர்களை களவாட ஒரு கூட்டமே உள்ளது.
இதை பாதுகாக்க, ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும்' என, காரைக்குடியில், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
வள்ளுவரையும், வள்ளலாரையும் பாரதத்தின் எந்த மாநிலத்துக்கு கொண்டு சென்றாலும், அதற்காக, தமிழர்கள் பெருமைப்படுவரே அன்றி, பொறாமைப் பட மாட்டார்கள்!
வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது எனக்கூறும் ஸ்டாலின், வடமாநிலத்தவரான காந்தி, நேரு, அம்பேத்கர்,நேதாஜி, இந்திரா, ராஜிவ் போன்றோருக்கு தமிழகத்தில் சிலை வடித்துள்ளது எதற்கு?
திராவிட மாடல் அரசு, அவர்களை களவாடி வந்துள்ளதா?
மேலும், 'பல்கலை நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; துணை வேந்தர் பதவி நியமிப்பது முதல்வராக இருக்க வேண்டும்' என ஆக்ரோஷம் காட்டியுள்ளார் ஸ்டாலின்.
அரசியல்வாதிகளின் தலையீட்டால், காவல் துறை இன்று, கையாலாகாத துறையாக உள்ளது; பள்ளிக் கூடங்கள் இரவில் மது கூடங்களாக காட்சிஅளிக்கின்றன.
இந்த லட்சணத்தில், பல்கலை துணை வேந்தரை முதல்வர் தான் நியமிக்க வேண்டும் என்றால், அதில் எந்த அளவு நேர்மை இருக்கும்?
தனக்கு வேண்டியவர்கள், குடும்ப உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள், பணத்தைக் கொட்டிக் கொடுக்க கூடியவர்கள் இவர்கள் மட்டும் தான் துணை வேந்தர்களாக முடியுமே தவிர, திறமைசாலிக்கு அங்கு வேலையில்லாமல் போய் விடும்.
அத்துடன், பல்கலை துணை வேந்தர்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும். ஈ.வெ.ரா.,வை புனிதராக்கியது போல், அவர்களை வைத்து, இன்னும் பலரை தமிழகத்தின் புனிதராக்கலாம்!
அதற்கு முட்டுக் கட்டை போடுவதால், முதல்வர் பொங்கி எழுந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் இருக்கையை காலி செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதே, முதல்வரின் வார்த்தைகள் இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக வருகிறதென்றால், இறுதி வரை பதவி நிச்சயம் என்றால், வார்த்தைகள் எப்படி வெளிவரும்?
நல்ல வேளை... நாட்டின் பிரதமரை கூட என்னை கேட்டு, நான் சொல்லும் நபரைத் தான் நியமிக்க வேண்டும் என சொல்லாமல் விட்டாரே... அதுவரை மகிழ்ச்சி!
இயற்கை சீறினால் தாங்க மாட்டீர்கள்!
எம்.நடேசன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில், கனிமவளக் கொள்ளை குறித்த விரிவான தொகுப்பு படித்தேன்; என்னைப் போல எத்தனையோ லட்சம் பேர் அதை படித்திருப்பர். ஆனாலும், நாம் அனைவரும் கையாலாகத தனத்துடன் தான் உள்ளோம்.
காரணம், இதில் தலையிட்டால், நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில் தான், தமிழகம் உள்ளது. இதை, ஒரு ராணுவ வீரனாக சொல்ல வெட்கமாக தான் உள்ளது; ஆனாலும், அதுதானே உண்மை!
மனிதர்கள் செய்யும் கொடுமைகளை, இயற்கை அன்னை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வாள்... 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது போல, ஒருநாள் அவள் வெகுண்டு எழும்போது, வீடு, வாசல் ஏன் நாம் வாழும் நகரத்தையே அவள் விழுங்கி விடக் கூடும்!
இந்தியாவின் பல மாநிலங்களை பார்க்கும்போது, தமிழகம் பல வகைகளில் பாதுகாப்பாக உள்ளது. அதுவும், கோவை, இயற்கையின் அரவணைப்பில் மிகவும் பத்திரமாக உள்ளது.
அதேநேரம், கனிம வளங்கள் இப்படி அபரிமிதமாக கொள்ளை அடிக்கப்படும்போது, இயற்கையின் பாதுகாப்பை நாம் இழந்து போவதுடன், பெரும் பாதிப்புக்கும் உள்ளாவது நிச்சயம்!
தன் குடும்பம் மற்றும் வாரிசுகள் மாட மாளிகையுடன் வாழ வேண்டும் என்பதற்காக, இயற்கையை அழித்து, பணம் சம்பாதிக்க நினைப்பது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமம்.
இதை, கனிமவள கொள்ளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் குடும்பத்தில் எவருக்கும் அரசு பணியோ, அரசு சலுகைகளோ கிடையாது என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் அவர்கள் திருந்துவர்!
அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும்!