நான்கு தங்கம் வென்றது தமிழகம்: தேசிய விளையாட்டில் அசத்தல்
டேராடூன்: தேசிய விளையாட்டில் தமிழகத்துக்கு 4 தங்கம் கிடைத்தன.
உத்தரகாண்ட் மாநிலத்தில், தேசிய விளையாட்டு 38வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான (5x5) கூடைப்பந்து பைனலில் தமிழகம், கேரளா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 79-46 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்களுக்கான (5x5) கூடைப்பந்து பைனலில் தமிழகம், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 64-80 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. பஞ்சாப் அணி தங்கத்தை கைப்பற்றியது.
பளுதுாக்குதல்: பெண்களுக்கான பளுதுாக்குதல் 87 கிலோ பிரிவில் தமிழகத்தின் ஆரோக்கியா அலிஷ் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 98, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 123 என, அதிகபட்சமாக 221 கிலோ பளு துாக்கிய இவர், தங்கம் வென்றார்.
நீச்சல்: ஆண்களுக்கான நீச்சல் 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு பைனலில் இலக்கை 24.55 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ரோகித் தங்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் கர்நாடகாவின் தினிதி (29.02 வினாடி) வெள்ளி வென்றார். இது, இம்முறை இவரது 6வது பதக்கம். ஏற்கனவே 5 தங்கம் வென்றிருந்தார். மற்றொரு கர்நாடகா வீராங்கனை நினா (28.87 வினாடி) தங்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 100 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் கர்நாடகாவின் ஸ்ரீஹரி நடராஜ் (56.26 வினாடி) தங்கம் வென்றார். இது, இம்முறை இவரது 5வது தங்கம் ஆனது. ஏற்கனவே கர்நாடகா வீராங்கனை தினிதி 5 தங்கம் வென்றிருந்தார்.
ஸ்குவாஷ்: ஆண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் பைனலில் தமிழகம், மகாராஷ்டிரா மோதின. வேலவன் செந்தில்குமார், அபய் சிங், ஹரிந்தர் சாந்து, குகன் செந்தில்குமார் அடங்கிய தமிழக அணி 2-0 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பெண்கள் அணிகளுக்கான பைனலில் ஏமாற்றிய தமிழக அணி 1-2 என மகாராஷ்டிராவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் அரையிறுதியில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், மகாராஷ்டிராவின் சுராஜ் சந்த் மோதினர்.இதில் வேலவன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் தமிழகத்தின் அபய் சிங் விலகியதால், மகாராஷ்டிராவின் ராகுல் பைதா, நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் தமிழகத்தின் ராதிகா, பூஜா தோல்வியடைந்தனர்.
துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் மகாராஷ்டிராவின் ராஹி சர்னோபத் 34, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 576.17 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த இவர், பைனலில் 35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பஞ்சாப் வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (34 புள்ளி), கர்நாடகாவின் திவ்யா (27) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் ஆஷி, 598.39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். தவிர இவர், புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2023ல் சிப்ட் கவுர் சாம்ரா, 594 புள்ளி பெற்றிருந்ததே தேசிய சாதனையாக இருந்தது.