நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இருங்காட்டுக்கோட்டை:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரம் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில், 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைந்துள்ளது.
இங்குள்ள தனியார் கார் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், இருங்காட்டுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையோரம், 24 மணி நேரமும் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், சாலை குறுகளாகி, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அந்த வழியே செல்லும் வாகனங்கள், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியை நிறுத்தும் ஓட்டுனர்களுக்கு, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.