'அமாவாசையை எண்ணுறாரே!'
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு நடந்த பாராட்டு விழா தொடர்பாக, மதுரையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ராஜு கூறுகையில், 'முதல்வர், அரிட்டாபட்டியில் அரசியலும், அவியலும் செய்தார். பழனிசாமி மற்றும் மக்கள் நடத்திய போராட்டத்தின் எழுச்சியின் காரணமாகவே, மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
'இந்த திட்டம் வரக்கூடாது என, தி.மு.க., கூட்டணியின், 40 எம்.பி.,க்கள் அரிட்டாபட்டியில் போராடினரா அல்லது பார்லிமென்டை தான் முடக்கினரா... முதல்வர் ஓட்டு கேட்கதான் அரிட்டாபட்டிக்கு சென்றார்...' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'முதல்வர் இப்பவே ஓட்டு கேட்க ஆரம்பிச்சிட்டாரு... இவரது தலைவர் பழனிசாமி அமாவாசையை அல்லவா எண்ணிட்டு இருக்காரு...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.