நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சித்திரையில் புது தேர் வெள்ளோட்டம்

திருப்பூர் : ''நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சித்திரை மாதம் புதிய தேர் வெள்ளோட்டமும், ஆனி மாதம் தேர்த்திருவிழாவும் நடைபெறும்' என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் நல்லுாரில் அமைந்துள்ளது. நுாற்றாண்டுக்கு முன் இங்கு தேர்த்திருவிழா நடந்து வந்தது; தேர்கள் சிதிலமடைந்த பிறகு, திருவிழா தடைபட்டது.

புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர் குழு, கோவிலுக்கு மீண்டும் தேர் செய்து, தேர்த்திருவிழா நடத்த திட்டமிட்டது. பக்தர்கள் பங்களிப்புடன், மரத்தேர் வடிவமைப்பு பணி, நல்லுாரில் உள்ள ராகம் நிறுவன வளாகத்தில் நடந்து வருகிறது.

முதல் நிலை பணி நிறைவு பெற்றதும், ஆகமவிதிகளின்படி சிறப்பு பூஜைகள் நடந்தன; இரண்டாம் நிலை பணி நிறைவடைந்து, நேற்று காலை சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது.

அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில், அறங்காவலர்கள் பிரியா கனகராஜ், சிவக்குமார் ஜெகதீஷ், அன்னபூரணி, கவுன்சிலர் விஜயலட்சுமி, கோபால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்தேர் உபயதாரர்கள் மற்றும் ஆதீஸ்வர் டிரஸ்ட் நிர்வாகி சுப்பிரமணியம், 'பூமர்' பழனிசாமி, சிவா கன்ஸ்ட்ரக் ஷன் சிவா, 'பிடெக்ஸ்' லோகநாதன், ஜெயசித்ரா சண்முகம், 'பூமெக்ஸ்' ரங்கசாமி, சித்தி விநாயகர் ஸ்பின்னர்ஸ் சிவக்குமார், 'தேவி கேக் ஷாப்' சாமிநாதன், 'சுப்ரீம்' ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று , தேர் வடிவமைப்பு மற்றும் தேர்த்திருவிழா குறித்து ஆலோசித்தனர்.

அறங்காவலர் குழு தலைவர் முருகேசன் கூறுகையில், ''தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் ஆனிமாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகம விதிகளின்படி, மரத்தேர் வடிவமைப்பு பணி நடந்து வருகிறது. வரும் சித்திரை மாதம் தேர் வெள்ளோட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம்.

நுாறு ஆண்டுகளுக்கு பிறகு, புதிய தேர், உற்சவமூர்த்தி சிலைகள், திருவீதியுலா வாகனங்கள் வடிவமைக்கப்படுகிறது. திருப்பூர் நகர மக்களின் பொதுநலன் வேண்டி, நல்லுாரில் மீண்டும் தேர்த்திருவிழா நடக்க உள்ளது,'' என்றார்.

Advertisement