ஜனவரியில் புதிய உச்சம் தொட்டது யு.பி.ஐ., பண பரிவர்த்தனை

புதுடில்லி:ஜனவரியில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகள் 1.70 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக என்.பி.சி.ஐ., தரவுகள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பண பரிமாற்றம் மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் வாயிலான பண பரிவர்த்தனைகள் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, கடந்த ஜனவரியில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை, 1.60 சதவீதம் அதிகரித்து 1.69 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024 டிசம்பரில் 1.67 கோடியாக இருந்தது.

கடந்த 2016 ஏப்ரல் முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து, எண்ணிக்கையின் அடிப்படையில் இது ஒரு புதிய சாதனையாகும்.

ஜனவரி மாதத்திற்கான தினசரி பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.43 கோடியாக இருந்தது. இது டிசம்பரில் 1.42 கோடியாக இருந்தது. தினசரி பரிவர்த்தனைகளின் மதிப்பு ஜனவரியில் 19,562 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரியில் எண்ணிக்கை 39 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 28 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதேபோன்று, பிற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளான, 'ஐ.எம்.பி.எஸ்., எனப்படும் உடனடி பண பரிமாற்ற சேவை' பரிவர்த்தனை எண்ணிக்கையும், கடந்த ஜனவரியில் 0.70 சதவீதம் அதிகரித்து 44.4 கோடியாக இருந்தது.

இது, கடந்த டிசம்பரில் 44.1 கோடியாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் ஜனவரியில் 6.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

மற்றொரு பரிவர்த்தனையான 'பாஸ்டேக்', ஜனவரியில் 0.50 சதவீதம் குறைந்து, 38 கோடியாக இருந்தது.

இது, டிசம்பரில் 38.2 கோடியாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் 6,614 கோடி ரூபாயாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement