குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினர்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 756 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் துபாயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் 76 ரன் விளாசிய ரோகித், ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். மற்றொரு இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் (784 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் விராத் கோலி (736), 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் (243) குவித்த இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் (704), 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


குல்தீப் 'நம்பர்-3': பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 650 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சாம்பியன்ஸ் டிராபியில் 7 விக்கெட் சாய்த்திருந்தார். நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் (657), 8வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இலங்கையில் மகேஷ் தீக் ஷனா (680) முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா (616), 13வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அக்சர் படேல் (38வது இடம், 504 புள்ளி), வருண் சக்ரவர்த்தி (80வது இடம், 402 புள்ளி) முன்னேற்றம் கண்டனர்.


'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (220), 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Advertisement