சிவன் சார் யோகசபை மஹா கும்பாபிஷேகம் 10,000க்கும் மேற்பட்டோர் தரிசனம்
சென்னை:ஸ்ரீ மஹா பெரியவரால் 'பிறவி ஞானி' என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சிவன் சாரின் ஜெயந்தியும், ஆராதனையும் ஒவ்வொரு ஆண்டும் நம் நாடு மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் அரபு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவரது சனாதன தத்துவங்களால் மலர்ந்த சிவன் சார் யோகசபை, பக்தர்களுக்கு ஒளிகாட்டும் விளக்காக பரிணமித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீ சிவன் சாரின் பக்தர்கள் சார்பில், நங்கநல்லுாரில் 'ஸ்ரீ சிவன் சார் யோக சபை' கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள், கடந்த 2023ல் துவக்கப்பட்டு, கடந்த மாதம் நிறைவடைந்தன.
இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக பணிகள், கடந்த ஜன., 29ல், குருவந்தனம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து நான்கு நாட்கள் கும்பாபிஷேக பூஜைகள் வெகு விமரிசையாக நடந்த நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில், ராஜகோபுரம், விநாயகர் சன்னதி மற்றும் ஸ்ரீ சிவன் சார் யோக சபை விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இவ்விழாவில், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன.