முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இன்றி விபத்தில் நேற்று ஒருவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இல்லாததால் 4 வழிச்சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்குவதன் மூலம் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று ஒருவர் பலியானார்.

மதுரை -- பரமக்குடி 4 வழி, பரமக்குடி -- ராமநாதபுரம் இரு வழிச்சாலையில் ஆன்மிக சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் 4 வழிச்சாலை வருவதற்கு முன் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் இரு வழித்தடங்களிலும் பஸ் ஸ்டாப் வசதி இருந்தது. 4 வழிச்சாலை வந்ததும் அந்த பஸ் ஸ்டாப்களை அகற்றிவிட்டனர்.

சர்வீஸ் ரோடுகளும் முழுமை பெறவில்லை. இங்கு பஸ் ஸ்டாப் வசதி இல்லாததால், 4 வழிச்சாலை மெயின்ரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இந்த ரோட்டை கடக்கும் பயணிகள் அடிக்கடி வாகனங்களில் சிக்கி பலியாகி வருகின்றனர்.

நேற்று மதுரை பழங்காநத்தம் சக்தி 28, பஸ்சில் இருந்து இறங்கி 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது, மதுரை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது போன்ற தொடர் விபத்துக்களை தவிர்க்க, சர்வீஸ் ரோடுகளை முழுமையாக கட்டி, அங்கு பஸ் ஸ்டாப் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement