ஊரக வளர்ச்சி அலுவலர்களிடையே அதிகார பகிர்வுக்கு வலியுறுத்தல்
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு தலைவர் சந்திரசேகரன் தலைமையில் மதுரையில் நடந்தது. இதில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக சந்திரசேகரன், செயலாளராக அன்பழகன், பொருளாளராக அமுதரசன் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ஜெயராமன், ஆசை, சிவமணி, இணைச் செயலாளர்களாக ஜெயபாலன், மகேஸ்வரன், ஸ்ரீவித்யாதேவி, செந்தில்குமார், பாலமுருகன், தணிக்கையாளர்களாக அழகுபாண்டி, சங்கரபாண்டியன் தேர்வானார்கள்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒன்றியங்களில் சத்துணவு பிரிவுக்கென இருந்த இளநிலை உதவியாளர், நுாறுநாள் வேலை திட்டத்திற்கான பிரிவில் இருந்து எடுக்கப்பட்ட 2 உதவியாளர் பணியிடங்களையும் மீண்டும் கொண்டு வரவேண்டும். அனைத்து திட்டங்களில் பணியாற்றும் தற்காலிக கணினி உதவியாளரில் பத்தாண்டு பணிமுடித்தோரை நிரந்தரமாக்க வேண்டும்.
இத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், ஜீப் ஓட்டுனர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி, ஒன்றியங்களை பிரித்திடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சித்துறை வழக்குகளை கண்காணிப்பதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடம் ஒதுக்க வேண்டும்.
தனி அலுவலர்களுக்கான அதிகாரத்தை நிர்வாக நலன்கருதி, இரு பி.டி.ஓ.,க்களுக்கும் (வட்டார மற்றும் கிராம ஊரக வளர்ச்சி அலுவலர்கள்) தலா 50 சதவீதமாக பகிர்ந்தளித்து கண்காணிக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மைப் பணியாளர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.