24 மணி நேரமும் குடிநீர்; கனவு மெய்ப்படுமா?
திருப்பூர் : திருப்பூரில், 4வது குடிநீர் திட்டப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் எப்போது முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் குடிநீர் தேவையின் அவசியம் கருதி, திருப்பூரில் 4வது குடிநீர் திட்டம், 100 கோடி ரூபாய் மதிப்பில், அம்ரூத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம், 147 தொட்டிகளில், 30 கோடி லிட்டர் குடிநீர் சேமித்து வினியோகம் செய்யும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில், 97 சதவீதம் பணி நிறைவடைந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முன்னர் இரு வாரத்துக்கு ஒரு முறை என்று இருந்த குடிநீர் சப்ளை தற்போது, 3 - 7 நாள் என்ற வகையில், வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில், 20, 30, 44 மற்றும் 51 ஆகிய வார்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
சோதனை வெற்றிகரம்
மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க தேர்வு செய்த வார்டுகளில் மட்டும் முதல் கட்டமாக செயல்படுத்தப்படும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிரதான குழாய்கள் பதிப்பு பணி முடிந்துள்ளது. சில வீதிகளில் மட்டும் வினியோக குழாய் பதிப்பு பணிகள் நடக்கிறது. வீட்டு இணைப்புகள் வழங்கும் பணியும் முழுமையாக முடியவில்லை.
நடைமுறைச்சிக்கல்கள்
சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பணிகள் தாமதமாகிறது. இப்பணிகள் முழுமையாக முடிந்து சோதனை அடிப்படையில் கசிவு இல்லை என்பது உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின்னரே, வீட்டு இணைப்புகளில் உரிய மீட்டர் உள்ளிட்டகருவிகள் பொருத்தப்படும். இவை முடிவுக்கு வந்த பின்னரே, 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.