பேரூரில் பிரமாண்ட தர்ப்பண மண்டபம்; வரும் 5ம் தேதி அறநிலையத்துறைக்கு ஒப்படைப்பு

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறையில், நல்லறம் அறக்கட்டளை சார்பில், ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட தர்ப்பண மண்டபம், வரும் 5ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.


பேரூர் படித்துறையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல நூற்றாண்டுகளாக தர்ப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த இடம், மிகவும் தாழ்வாக இருந்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்த தர்ப்பணம் செய்யும் இடம் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டு வந்தது.


இந்நிலையில், நல்லறம் அறக்கட்டளை சார்பில், பேரூர் படித்துறையில், அறநிலையத் துறைக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் இடத்தில், புதியதாக தர்ப்பணம் மண்டபம் கட்டுவதற்காக, 2020ம் ஆண்டு, ஜூன் 5ம் தேதி, பூமி பூஜை செய்யப்பட்டது. 15 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தர்ப்பணம் மண்டபம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

மண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்



தலா 100 பேர் அமர்ந்து, தர்ப்பணம் செய்யும் வகையில், 50 தர்ப்பண மண்டபங்கள், 500 பேர் அமரும் வகையில், காத்திருப்போர் மண்டபம், கோமடம், ஆண்கள், பெண்களுக்கான நவீன குளியலறை மற்றும் கழிப்பறை வசதி, ஒரே நேரத்தில், 100 கார்கள் மற்றும் 250 பைக்குகள் பார்க்கிங் செய்யும் வகையிலான பார்க்கிங் வசதி, மழைநீர் வடிகால் வசதி, 27 நட்சத்திரங்களுக்கு உண்டான, 27 மரங்கள் அடங்கிய தோட்டம், நவக்கிரகங்களுக்கான, பிரத்யேகமான, நவக்கிரக தூண்கள், மருத்துவ வசதி, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு என, தனி அறைகள், 45 ஆயிரம் சதுர அடியில், கிரானைட் கற்களால், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

நொய்யலாறு, படித்துறையில், 18 படிக்கட்டுகள் கொண்டு படித்துறை சீரமைக்கப்பட்டுள்ளது. தர்ப்பண மண்டபம் அருகே உள்ள காந்தி மண்டபமும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவிலும் புனரமைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய தர்ப்பண மண்டபம், கோவையின் அடையாளங்களில் ஒன்றாக அமையும்.

புதியதாக கட்டப்பட்ட தர்ப்பண மண்டபத்தை, நல்லறம் அறக்கட்டளையினர், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம், ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வரும், 5ம் தேதி நடக்கிறது.

நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணி என, பலரும் பங்கேற்கின்றனர்.

Advertisement