பழங்குடியின கிராமங்களில் நக்சல் தடுப்பு சிறப்பு முகாம்
பந்தலுார் : பழங்குடியின கிராமங்களில் நடந்த சிறப்பு முகாமில், பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நக்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் பழங்குடியின கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பந்தலுார் அருகே சந்தனசிறா, சொரியன்காப்பு பகுதியில் சிறப்பு முகாம்கள் நடந்தது. வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் வரவேற்றார். துணை கலெக்டர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.
பந்தலுார் தாசில்தார் சிராஜூனிஷா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு, இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன்,
எஸ்.ஐ., செந்தில்குமார் ஆகியோர் தங்கள் துறைகளின் மூலம், பழங்குடியின மக்களுக்கு மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.
அதில், சில வீடுகளுக்கு மின்வாரியம் சார்பில் உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 'பிற கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய தீர்வு காணப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. முகாமில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வனவர் பொம்மன், மின்வாரிய உதவியாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வி.ஏ. ஓ., அசோக்குமார் நன்றி கூறினார்.