ஹிந்து முன்னணி தர்ணா; போலீஸ் அனுமதி மறுப்பு
மதுரை; ''திருப்பரங்குன்றத்தில், நாளை ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்,'' என, மதுரை நகர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் இரு வேறு பிரிவினர் சார்பில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளன.
இந்நிலையில், பிப்., 4ல் ஹிந்து முன்னணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுத்த விபரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிகளவில் திரட்டும் செயல்களில் ஹிந்து முன்னணி ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் ஹிந்து அமைப்பினரை வீட்டு காவலில் வைப்பதை போலீசார் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.