விரைவில் 'வேட்டையன்' இடம் மாற்றம் மாவட்ட நிர்வாகம் உறுதி
பெ.நா.பாளையம் : தடாகம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சுற்றி திரியும் 'வேட்டையன்' என்கிற ஒற்றை ஆண் யானை, விரைவில் இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கிராமங்களில் வசிப்பவர்களும், விவசாயிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வேட்டையன் எனப்படும் ஒற்றை ஆண் யானை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியிருப்புகளில் புகுந்து வீட்டுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி, மாவு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் விவசாயி வேலுமணி, 74, தனது வீடு அருகே நின்று கொண்டு இருந்தபோது, யானை தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து துடியலூர் தடாகம் ரோட்டில் தாளியூர் அருகே வாக்கிங் சென்ற மளிகை கடை நடத்தி வந்த நடராஜ், 69, அதே ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் துடியலுார் தடாகம் ரோட்டில், 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து, வேட்டையன் யானையை இடமாற்றம் செய்ய, சென்னை வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை, விவசாயிகளுக்கு வனத்துறையினர் காட்டினர். இதையடுத்து, விவசாயிகள் தங்களுடைய மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கு மறுநாள் முத்து என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னரும் வேட்டையன் என்ற ஒற்றை யானை தடாகம் பகுதியில் விளை நிலங்களில் ஆங்காங்கே சுற்றி வருகிறது என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தடாகம் பகுதியை விவசாயிகள் ஒருங்கிணைந்து கோவை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது கலெக்டரிடம் வேட்டையனை இடம் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது வனத்துறையினர் வேட்டையன் யானையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். அப்போது, 'பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தால், யானை இடமாற்றம் செய்யப்படும்,' என கலெக்டர் கிராந்தி குமார் உறுதி அளித்தார்.