ஈர நிலங்களால் பல்லுயிர் வளங்கள் பெருகும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
ஆனைமலை : ஆனைமலை அருகே ரெட்டியாரூர் பள்ளியில், உலக ஈரநிலங்கள் தின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், உலக ஈர நிலங்கள் தினம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுச்சாமி, பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
அர்த்தநாரிபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அதில், ஏரி, குளம், குட்டைகளை பாதுகாப்போம், குப்பையை ஏரி குளங்களில் கொட்டாதே, ஈர நிலங்களை பாதுகாப்போம் என முழக்கமிட்டபடி வீதிகளில் சென்றனர்.
மாணவர்கள், வீடு, வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்கள் பேசுகையில், 'தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்டு இருக்கும் இடங்கள், ஈர நிலங்களாகும்.ஈர நிலங்களை பாதுகாப்பதன் வாயிலாக பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது. அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
ஈரநிலங்கள் முக்கியமாக தரைக்கு கீழ், நீரின் தரத்தை பாதுகாக்கிறது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகிறது.ஈர நிலப்பகுதியான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை பாதுகாப்போம். கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்ப்போம்,' என்றனர்.
உலக ஈர நாள் குறித்து, மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம், வினாடி - வினா, கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.