போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியர் கைது
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி அவரது தாயிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீசார் மற்றும் ஈரோடு சைல்ட் லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் சைல்ட் லைன் அமைப்பினர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு சாக்லேட்,கேக் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஈரோடு, 46 புதூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் தண்டபாணி,55, மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.