குடும்ப வன்முறைகள் 179 குழந்தை திருமணங்கள் 150 2024 ஜன. முதல் டிச. வரை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜன. முதல் டிச. வரை குடும்ப வன்முறைகள் 179, குழந்தை திருமணங்கள் 150 எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து சமூக, மகளிர் நலத்துறையும், சகி ஒருங்கிணைந்த சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. 181க்கு அழைப்பதன் மூலம் இந்த புகார்கள் எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கின்றனர்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான குற்றங்களை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கின்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜன. முதல் டிச. வரை குடும்ப வன்முறைகள் 179, வரதட்சணை கொடுமைகள் 11, பாலியல் துன்புறுத்தல்கள் 10, பணியிட துன்புறுத்தல் ஒன்று, பாலியல் பலாத்காரம் ஒன்று, குடும்ப தகராறுகள் 41, திருமணத்திற்கு முந்தைய தகராறு, காதலித்து வெளியூர் சென்றவர்கள் 136, குழந்தை திருமணங்கள் 150, போக்சோவில் ஒன்று, குழந்தைகள் தொந்தரவு 7, மாயமான, கடத்தப்பட்ட, ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை 53, திருமணம் தாண்டிய உறவால் ஏற்பட்ட தகராறு 68, சைபர் குற்றங்கள் 26, பணியிட அட்ஜஸ்மென்ட், மன உளைச்சல், தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை 58, மிரட்டிய, ஏமாற்றிய வழக்குகள் 55, கட்டாய திருமணம் 31 என்ற வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சு போன்ற கொடூர குற்றச்சம்பவங்கள் இல்லை.
குழந்தை திருமணம் 150ல் 105 நிறுத்தப்பட்டது, 45 நடந்தது. இதில் 29 இருவீட்டார் சம்மதத்துடனும், 13 காதலித்து வெளியூர் சென்றதும் ஆகும். 41 வழக்குகள் மீது முதற்கட்ட தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சமூகநல அலுவலர் ஷீலா சுந்தரி கூறியதாவது: குடும்ப வன்முறைகள், பெண்கள் பணியிடங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தவிர்க்காமல் உடனடியாக 181ல் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.