பல்வேறு நன்மைகளை கொண்ட 'நீரா' பானம் மீண்டும் வருமா? வருவாயின்றி தவிக்கும் தென்னை விவசாயிகள்

உடுமலை: தேங்காய்க்கு விலை இருந்தும், பல்வேறு நோய்த்தாக்குதல்களால், தென்னந்தோப்புகளில், உற்பத்தி முற்றிலுமாக பாதித்துள்ளது. தவித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு ஆறுதலாக, 'நீரா' பானம் உற்பத்திக்கு தமிழக அரசு உதவினால், விவசாயிகள், பொதுமக்கள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பொள்ளாச்சி பகுதியிலும் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை விவசாயத்திலும் நோய்த்தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை பொருட்களும், மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டு வருகிறது.

அதன்படி, இளநீர், தேங்காய் எண்ணெய், தென்னங்கருப்பட்டி ஆகிய பொருட்கள் முன் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பல்வேறு மாற்றங்களால் இப்பொருட்கள் பயன்பாடு குறைந்தது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், தென்னையில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு வழிகாட்டுதலும், வழங்கி வருகிறது.

அதில், தென்னம்பாளையில் இருந்து, பெறப்படும், 'நீரா' பானம், முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேரளாவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, இவ்வகை பானம் உற்பத்தி துவங்கி, தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது.

உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் இந்த பானத்தை உற்பத்தி செய்ய, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன், தென்னை மரங்களில் இருந்து, 'நீரா' பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்தது.

தனிநபராக இல்லாமல், தென்னை வளர்ச்சி வாரியத்தால், அனுமதிக்கப்பட்ட, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே, உற்பத்தி செய்ய அரசு வழிகாட்டுதல் வழங்கியது.

அதன்படி, உடுமலை பகுதியில், இரண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, தென்னை மரத்தில் இருந்து 'நீரா' பானம் இறக்கி, விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில், 'நீரா' பானம் விற்பனை மையம் பல்வேறு இடங்களில், துவக்கப்பட்டது.

விழிப்புணர்வு இல்லை



மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது, அரசு தரப்பில் எவ்வித ஊக்கமளிக்காதது உள்ளிட்ட காரணங்களால், 'நீரா' உற்பத்தியை விவசாயிகள் கைவிட்டனர்.

தற்போது தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை பல மடங்கு உயர்ந்தும், வாடல் நோய்; வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட தொடர் பாதிப்புகளால் தேங்காய் உற்பத்தி முற்றிலுமாக சரிந்து விட்டது.

இதனால், விலையேற்றத்தால், விவசாயிகளுக்கு பயன்கிடைக்கவில்லை. இச்சூழலில், நீரா பானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உற்பத்திக்கு அரசு உதவ எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விவசாயிகள் கூறியதாவது:

தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் 'நீரா' பானம் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது.

மரத்தில் இருந்து, 5 டிகிரி செல்சியஸ், குளுமையில் வடித்து எடுக்கப்படும் பானத்தில், எந்த கலப்படமும் செய்யப்படுவதில்லை. காலை நேரம் இப்பானத்தை அருந்தலாம். தொடர்ந்து, இப்பானத்தை, அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும்.

இத்தகைய இயற்கை பானங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தால், விவசாயமும் மேம்படும்; உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

தென்னை மரங்களில் தொடர் நோய்த்தாக்குதலால், காய்ப்புத்திறன் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி விட்டு, மறுநடவு செய்யும் போது, தேங்காய் உற்பத்தியாக, 4 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.

எனவே, 'நீரா' உற்பத்தி, விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்; மக்களும் பயன்பெறுவார்கள்.

இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசுத்துறைகள் சார்பில், 'நீரா' விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement