17 பேர் மர்ம மரணம் எதிரொலி; ஜம்முவில் எய்ம்ஸ் குழு ஆய்வு

ஸ்ரீநகர்; ஜம்மு - காஷ்மீரில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த கிராமத்தில், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் பாதல் கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கடந்த டிசம்பர் இறுதியில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பரிசோதனை



இதில், 17 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்; 38 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு ஏற்பட்ட கிராமத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆய்வு செய்ய, பல்வேறு அமைச்சகங்களின் 11 அதிகாரிகள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள், பாதல் கிராமத்தில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., பரிசோதனைக் கூடத்தில், இதற்கான சோதனை நடத்தப்பட்டது.

இதில், இறப்பிற்கு நோய் எதுவும் காரணமில்லை என்றும், அவர்களின் உடல்களில் நச்சுத்தன்மை கலந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் வினியோகிக்கப்படும் 200க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேசமயம், பாதல் கிராமம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டில்லியில் உள்ள மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் பாதல் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவில் நச்சுவியல், மயக்க மருந்து உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மர்ம மரணம்



கிராமத்தில் உள்ள பல்வேறு தரப்பினரிடம் மர்ம மரணம் குறித்த விபரங்களை அவர்கள் சேகரித்தனர். ரஜோரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரை சந்தித்த அவர்கள், சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.

கடந்த டிச., 7 - ஜன., 19 வரையிலான காலகட்டத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், 300க்கும் மேற்பட்ட 87 குடும்பங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுஉள்ளனர்.

பாதல் கிராமம் முழுதும், 180 அதிகாரிகள் 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement