அரும்பார்த்தபுரம்-நுாறடிச்சாலை பைபாசில் ஆக்கிரமிப்பு துவக்கம்
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை இணைக்கும் புதிய பைபாசில், அதற்குள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா காந்தி சிக்னல் வரையிலான சாலை அகலப்படுத்தப்படாததால், தினமும் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்திலிருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு, புதிய புறவழிச்சாலை (பைபாஸ்) ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணி நடந்து, புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், தற்போது அதில் வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில், நுாறடிச்சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் புறவழிச்சாலையின் பணிகள் முழுமை பெறாத நிலையில், தற்போது சிலர், சாலையோரங்களில் ஜல்லி, மணல், மண் உள்ளிட்டவைகளைகொட்டி ஆக்கிரமித்து இடம் பிடிக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் அங்கு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத சூழல் ஏற்படும். எனவே, நுாறடிச்சாலை- அரும்பார்த்தபுரம் சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.