உலக சாம்பியனை வென்றார் பிரக்ஞானந்தா; குவிகிறது வாழ்த்து மழை!
சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. இதன் 'மாஸ்டர்ஸ்' பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, பிரக்ஞானந்தாவின் 'ஹாட்ரிக்' வெற்றியானது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 46வது நகர்த்தலில் வென்றார். 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் மோதிய மற்றொரு 12வது சுற்றுப் போட்டி 50வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்ற இந்திய வீரர்கள் மென்டோன்கா, ஹரிகிருஷ்ணா தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.
12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை இடத்தை பிடித்தார். உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் (7.5 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா (6.0 புள்ளி), அர்ஜுன் (4.5), மென்டோன்கா (4.5) முறையே 8, 12, 13வது இடத்தில் உள்ளனர்.
கடைசியில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார். பிரக்ஞானந்தாவை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
யார் இந்த பிரக்ஞானந்தா?
* தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆகஸ்ட் 10ம் தேதி 2005ம் ஆண்டு பிரக்ஞானந்தா பிறந்தார்.
*5 வயதில் செஸ் போட்டிகளில் களமிறங்கி, தனது 7வது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.
* 2013ம் ஆண்டு பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
* இவர் செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.