மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சியினர் கருத்து
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும் ,எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
மாஜி முதல்வர் நாராயணசாமி:
மத்திய பட்ஜெட் மீது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது. தனி நபர் வருமானம் ரூ. 12 லட்சம் வரை வரி விலக்கு அளித்த அறிவிப்பு மட்டுமே பேசும் பொருளாக உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க திட்டம் இல்லை.
தொழில்துறை, விவசாயம், உள் கட்டமைப்புகள், வேலை வாய்ப்பு, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மகாலட்சுமி ஆசீர்வாதம் இல்லை. 1 சதவீதம் மட்டுமே மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், 99 சதவீதம் ஏமாற்றம் தான் மிஞ்சியது என கூறினார்.
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன்:
மத்திய அரசின் பட்ஜெட் கானல் நீர் போல் உள்ளது. வருமான வரி உச்ச வரம்பு ரூ. 12 லட்சம் என நிர்ணயித்துள்ளதால், நடுத்தர மக்கள் பயன்பெறுவர். புதுச்சேரிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. புதுச்சேரிக்கு, விமான நிலைய விரிவாக்க திட்டம் இல்லை. சென்னை இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி-கடலுாருக்கும், திண்டிவனம்-புதுச்சேரி ரயில்பாதை திட்டம் குறித்தும் அறிவிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் மத்திய பா.ஜ., கூட்டணி அரசு இருந்தாலும், மாநிலம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர்:
நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம்:
மத்திய பட்ஜெட், ஏழை, நடுத்தர மக்களுக்கும் உபயோகம் இல்லாத பட்ஜெட் ஆகும். மக்கள் வாங்கக்கூடிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்கப் படவில்லை. விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்காமல் கிராமப்புற மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். பா.ஜ., ஆதரவு மாநிலத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், புதுச்சேரி மாநிலத்திற்கு எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன்:
புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடப்பதாக ஓயாமல் தம்பட்டம் அடிக்கும் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பெஸ்ட் புதுச்சேரி என்றார்கள். ஆனால் அதற்கான எவ்வித அறிகுறியும் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இல்லை. பட்ஜெட்டில் புதுச்சேரி என்ற பெயர் உச்சரிக்கப்படவில்லை.
மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ்:
மத்திய நிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கான பல அறிவிப்புகள் அடங்கிய ஒரு அறிக்கையாகவே தென்படுகிறது. நாட்டில் உள்ள எல்லா துறைகளும் அனைத்து தரப்பு மக்களும் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது வரவேற்கத் தகுந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., :
கடந்த பத்தாண்டில் நாட்டு மக்களை ஏமாற்றியது போல இனி வரும் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற சிந்தனையோடு ஒரு பட்ஜெட்டை கடமைக்குப் படித்து முடித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். துளி நன்மை கூட கிடைக்காத மக்கள் விரோத மோடி பட்ஜெட் இது.