பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு பொன்னியம்மன், செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு ஏர்போர்ட் சாலையில் உள்ள பொன்னியம்மன், செல்வ விநாயகர் கோவிலில், புதிதாக 5 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

30ம் தேதி நவக்கிரஹ ஹோமங்களும், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. 1ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது.

நேற்று காலை 8:00 மணிக்கு, நான்காம் கால யாகபூஜையும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், புனித நீர் கொண்டுவரப்பட்டு காலை 10:20 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலசுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான, ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், காங்., இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement