ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் இரும்பு கம்பிகள் திருட்டு
புதுச்சேரி: ஆரியப்பாளையம் பழைய பாலத்தின் தடுப்பு கட்டைகளில் உள்ள இரும்பு கம்பிகள் மர்மநபர்களால் திருடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமான ஆரியப்பாளையத்தில் உள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் சேதமடைந்ததுடன், தாழ்வாக இருந்ததால் கடந்த 2020ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் மூழ்கியது.
இதையடுத்து, ரூ. 60 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, கடந்த அக்.28ம் தேதி திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பழைய பாலத்தை குறைந்த அளவிலான வாகன ஓட்டிகளே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பழைய பாலத்தின் ஓரங்களில் விபத்துகளை தவிர்க்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, அதன் குறுக்கே இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன.
தற்போது, இப்பாலத்தில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால், அதனை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர் தடுப்பு கட்டைகளின் குறுக்கே பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை உடைத்து திருடி வருகின்றன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர தடுப்பு கம்பி இல்லாததால், ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் தடுப்பு கட்டை கம்பியை மர்மநபர்கள் திருடி செல்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.