பஸ்களில் ஏற விடாமல் லோக்கல் பஸ் செக்கர்கள் அடாவடி பிள்ளையார்குப்பத்தில் பயணிகள் அவதி
புதுச்சேரி: பிள்ளையார்குப்பத்தில் லோக்கல் பஸ் செக்கர்களின் அடாவடியால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
புதுச்சேரி-கடலுார் வழித்தட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பிள்ளையார்குப்பம் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்வது வழக்கம். இரவு நேரத்தில் லோக்கல் பஸ் செக்கர்களின் அடாவடியால் பயணிகள் உரிய நேரத்தில் பஸ்சில் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர். இரவு 7:00 மணிக்கு பிறகு லோக்கல் பஸ்சில் மட்டுமே பயணிக்கு வேண்டும் என்ற கட்டாய முறையை கொண்டு வந்துள்ளனர்.
பாகூர், கன்னிக்கோவிலில் இருந்து வரும் லோக்கல் பஸ்சில் பயணிகளை ஏற்றுவதிற்காக, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ்களை பிள்ளையார்குப்பம் பஸ் ஸ்டாபில் நிறுத்த விடாமல் செக்கர்கள் துரத்தி அடிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் பஸ் கடந்து சென்றாலும் அதில் செல்ல முடியாமல், 45 நிமிட காத்திருந்து லோக்கல் பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செல்வோர், நோயாளிகளை காண வரும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். லோக்கல் பஸ் செக்கர்களின் அடாவடி செயலை தடுத்து, அனைத்து பஸ்களிலும் பயணிகள் ஏறி செல்லலாம் என்பதை போக்குவரத்து துறை மற்றும் போலீசார் உறுதி செய்ய வேண்டும்.