ஆமைகள் இறப்பு அதிகரிப்பு: மீனவர்கள் அச்சம்
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கடற்கரை பகுதி யில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது மீனவர்களிடையேஅச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இனப் பெருக்க காலங்களில் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லவது வழக்கம்.
இதற்காக வரும் ஆமைகள், மீன்பிடி வலைகள், கப்பல்கள், படகுகளில் சிக்கி காயமடைந்து உயிரிழப்பது சில நேரங்களில் நடக்க கூடும்.
தற்போது, ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக் காலம் என்பதால், அவை கடற்கரையை நோக்கி வருகின்றன. இந்நிலையில், கிருமாம்பாக்கம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களான மூ.புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி காக்கைக்கு இரையாகி வருகின்றன.
மீனவர்களிடம் கேட்ட போது, ''முட்டை இடுவதற்காக கரையை நோக்கி வரும் ஆமைகள் சில காயமடைந்து இறந்து விடும். ஆனால், இப்போது வழக்கத்தை விட அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
குறிப்பாக, பெஞ்சல் புயலுக்கு பின்னர் கடலில் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.''