நோணாங்குப்பம் படகு குழாமில் போதிய வசதிகள் இல்லை தனியார் இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில் போதிய படகுகள் மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் தனியார் படகு குழாமிற்கு படையெடுத்து செல்கின்றனர்.

புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தளமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. புதுச்சேரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் புதுச்சேரி ,கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் விடுமுறை நாட்களில் நோணங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்வது வழக்கம்.

வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படும். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதன் மூலம் லட்ச கணக்கில் சுற்றுலாத்துறைக்கு வருமானம் வருகிறது. படகு குழாமில் போதிய படகுகள் இல்லாமல் இருப்பதால், நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்ட வருகிறது.

இங்கிருந்து படகு மூலம், பாரடைஸ் பீச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, தங்குமிடம், குடிநீர், குளியல் மற்றும் உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. அதிக பணம் செலுத்தி படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் திருப்தியின்றி செல்கின்றனர்.

படகு குழாமில் போதிய வசதிகள் குறைவாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் தனியார் படகு குழாமை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே படகு குழாமில் அதிகளவு படகு வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதற்கு சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement