கட்டட மேற்பரப்பு விளம்பர பேனர்களுக்கு கிடுக்கிபிடி: நகராட்சி விதிமுறைகளில் அதிரடி திருத்தம்
புதுச்சேரி: கட்டட மேற்பரப்பில் வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கும் இனி அனுமதி பெற வேண்டும் என நகராட்சி விதிமுறைகளில் அதிரடியாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் நகரின் அழகினை சீர்குலைக்கும் விதத்தில் பேனர்கள் கண்டமேனிக்கு சாலைகளில் வைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பேனர்களை அகற்றும் விஷயத்தில் தொடர்ந்து தோல்வி தான் ஏற்பட்டு வருகின்றது.
ஒப்புக்கு சில நாட்கள் பேனர்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் மீண்டும் பேனர்கள் முளைத்துவிடுகின்றன.
இது ஒருபுறம் இருக்க சாலைகள், முக்கிய சிக்னல்களில் கட்டடங்களின் மேற்பரப்புகளில் விளம்பர பலகைகள் நிரந்தரமாக வைக்கப்பட்டு வருகின்றன.
இவை, மழை, புயல் காலங்களில் கீழே சரிந்து பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த பேனர்கள் ஸ்த்திர தன்மையாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2017ம் ஆண்டிற்கு பிறகு நகராட்சிகளிடம் அனுமதி பெறாமல் இந்த பேனர்கள் கட்டட மேற்பரப்புகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், கட்டட மேற்பரப்பில் வைக்கப்படும் விளம்பர பேனர்களும் நகராட்சியின் அனுமதி பெற வேண்டும் என நகராட்சி விதிமுறைகளில் அதிரடியாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக, புதுச்சேரி நகராட்சியும், உழவர்கரை நகராட்சி துணை விதிகளில், வெளிப்புற ஊடக சாதனங்கள் என்ற உட்பிரிவும் சேர்த்து, ஹோர்டிங்குகள், பேனர்கள், சுவர் ஓவியங்கள் வைக்க அனுமதி பெற வேண்டும் என்று சேர்க்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
சாலையில் வைக்கப்படும் பேனர்களை முறைப்படுத்த நகராட்சிக்கு அதிகாரம் இருந்தாலும், கட்டட மேற்பரப்புகளில் வைக்கப்படும் ஹோர்டிங்குகள் விஷயத்தில் தலைகீழானது. விளம்பரங்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதால், ஹோர்டிங்குகள் நகராட்சியின் அனுமதி இல்லாமல் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகவே கட்டட மேற்பரப்புகளில் வைக்கப்படும் ஹோர்டிங் உள்ளிட்ட விளம்பர பலகைகளும் நகராட்சியின் அனுமதி பெற வேண்டும் என்றும், ஸ்ட்ரக்சுரல் சர்டிபிகேட் சமர்பிக்க வேண்டும் என்றும் திருத்தம் கொண்டு வந்து கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை திருத்ததை தொடர்ந்து கட்டட மேற்பரப்பில் விளம்பர பேனர்கள் வைத்துள்ள நிறுவனங்கள், உரிமையாளர்களக்கு நோட்டீஸ் அனுப்ப நகராட்சிகள் ரெடியாகி வருகின்றன.