கோவில் திருவிழா விளம்பரத்தால் துளிர்விடும் பேனர் கலாசாரம் ஏர்போர்ட் சாலையில் கடும் நெரிசல்
புதுச்சேரி: லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் கோவில் திருவிழாவிற்காக சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை பொன்னியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. கோவில் திருவிழாவிற்காக வரும் அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று கடந்த ஒருவாரமாக ஏர்போர்ட் சாலை முழுவதும் கண்டமேனிக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் ஏர்போர்ட் சாலையில் பேனருக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட எந்த தகவல்களும் இல்லை.
ஏர்போர்ட் சாலையில் 75க்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்துள்ளனர். ஆனால் உழவர்கரை நகராட்சியில் இரண்டு பேனர்கள் மட்டுமே வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மற்ற பேனர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்ட விரோத பேனர்கள் மட்டுமின்றி கோவில் திருவிழாவிற்காக மூன்று இடங்களில் அலங்கார வளைவுகளும் சாலையை சேதமாக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏற்கனவே குறுகலாக உள்ள ஏர்போர்ட் சாலையில், இந்த அலங்கார வளைவு வைத்துள்ள இடங்களில் சாலை மேலும் சுருங்கி , தினமும் உச்சக்கட்ட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
ஏர்போர்ட் சாலை வழியாக தான் உயர் அதிகாரிகளில் வீடுகளுக்கு சென்று வரவேண்டும். அப்படி இருக்கும்போது இந்த சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் படும் துன்பம் கண்ணுக்கு தெரியவில்லையா. ஏன் கண்டும் காணாமல் செல்லுகின்றனர் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
கோர்ட் நேரடியாக தலையிட்ட பிறகு அரசியல் கட்சிகள் பேனர் வைக்க யோசிக்கின்றன. ஆனால் கல்யாண மற்றும் திருவிழா கோஷ்டிகள் தான் பேனர் கலாசாரத்தை மீண்டும் துளிர்விட செய்கின்றனர்.
இவர்களை பார்த்து மற்றவர்களும் காது குத்து, மஞ்சள் நீர், பிறந்தநாள் விழா என வரிசையாக பேனர்கள் வைக்க ஆரம்பித்து விடுகின்றனர். இந்த கல்யாண கோஷ்டிகளையும், திருவிழா கோஷ்டிகளையும் முறைப்படுத்தினால் மட்டுமே சட்ட விரோத பேனர்களை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இது தேவையா....
கோவில் திருவிழாக்களில் சாமியின் படங்களை கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிதாக போட்டுவிட்டு, பேனர்கள் வைப்பவர்கள் தங்களின் புகைப்படங்களை பெரிதாக போட்டுகொள்கின்றனர். இந்த கலாசாரம் தான் இப்போது அனைத்து கோவில் திருவிழாக்களில் முளைத்து வருகின்றது. மன அமைதிக்காக சாமி கும்பிட பொதுமக்கள் கோவிலுக்கு வருகின்றனர். பேனர்களில் இருப்பவர்களின் முகத்தையோ, அரசியல் கட்சி தலைவர்களுக்கான வரவேற்பு பேனர்களை யாரும் பார்க்க வருவதில்லை. திருவிழாக்களில் இது போன்ற பேனர்கள் தேவையா என்பதை அரசு யோசிக்க வேண்டும்.
யோசிக்குமா....
கோவில் திருவிழாக்களில் வைக்கப்படும் ஒரு பேனர் கிழிந்தால் கூட அந்த பகுதியில் சட்ட ஒழுங்கை சீர்குலைந்து விடும். கோவில் திருவிழாவும் தடைபடும். அப்படி இருக்கும்போது ,கோவில் திருவிழாக்களில் இந்த பேனர் கலாசாரம் தேவையா என்பதை அந்தந்த கோவில் நிர்வாகங்களும் தீவிரமாக யோசித்து பார்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி, பேனர்களை முறைப்படுத்த அந்தந்த கோவில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் திருவிழாக்களுக்காக பேனர், அலங்கார வளைவுகள் வைக்கும்போது போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் எண்ணிக்கையை குறைக்க செய்ய வேண்டும். குறிப்பாக கோவில் திருவிழாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் மட்டுமே பேனர் வைக்க செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை கோவில் நிர்வாகங்களுடன் இந்து அறநிலைய துறை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.