ஏ.எப்.டி., மில் ரயில்வே கேட் முன் அறிவிப்பின்றி மூடல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதுச்சேரி: புதுச்சேரியில் தண்டவாளம் மாற்றும் பணிக்காக ஏ.எப்.டி., மில் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து, சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையம் வரையிலான விழுப்புரம் ரயில் பாதையில், பழைய இரும்பு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, சின்னபாபுசமுத்திரத்தில் இருந்து தண்டவாளங்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது.
நேற்று காலை 11:00 மணிக்கு, புதுச்சேரி கடலுார் சாலையில், முதலியார்பேட்டை ஏ.எப்.டி., ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டு ரயில் தண்டவாளங்கள் மாற்றும் பணி துவங்கியது. மெயின் ரோடில் முன் அறிவிப்பின்றி, திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டதால், முதலியார்பேட்டை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது.
நீண்டநேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள், ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொண்ட ஊழியர்களிடம், முன் அறிவிப்பின்றி ஏன் கேட் மூடப்பட்டது என கேட்டு, தகராறு செய்தனர்.
இதன் பிறகு, போக்குவரத்து போலீசார் வந்து சமாதானம் செய்து , வாணரப்பேட்டை வழியாகவும், புவன்கரே வீதி வழியாகவும் வாகனங்களை திருப்பி விட்டனர்.