முத்திரைத்தீர்வை நிலுவை சிறப்பு முகாம் துவங்கியது

திருப்பூர் : முத்திரைத்தீர்வை நிலுவையை செலுத்த ஏதுவாக, மார்ச் 31 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சொத்து விற்பனையின் போது, முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணம் என, மொத்த சொத்து மதிப்பில், 9 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். இதை கண்காணிக்கும் வகையில், முத்திரைத்தீர்வைக்கான டி.ஆர்.ஓ., மற்றும் தனி தாசில்தார்கள் இயங்கி வருகின்றனர்.

மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, சொத்து மதிப்பின் அடிப்படையில் முறையான முத்திரைத்தீர்வை செலுத்தவில்லை என்று தகவல் அளிக்கப்பட்டால், கிரய பத்திரம் முடக்கி வைக்கப்படுகிறது. முத்திரைத்தீர்வை நிலுவையை வசூலிக்க வேண்டியது, வருவாய்த்துறையின் பொறுப்பு. அதன்படி, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, நிலுவை முத்திரைத்தீர்வையை செலுத்த உத்தரவிடப்படுகிறது.

முத்திரைத்தாள் தீர்வைக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், ''பதிவுத்துறை செயலர் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில், பிப்., 1ல் நிலுவை முத்திரைத்தீர்வை வசூல் முகாம் துவங்கியது. மார்ச் 31 வரை நடக்கிறது. சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகங்களில், நிலுவை தொகையை செலுத்தி, தங்கள் பத்திரத்தை விடுவித்துக்கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement