மாநில கராத்தே போட்டி நாமக்கல் முதலிடம்
ராசிபுரம்: ராசிபுரம் தனியார் பள்ளியில், தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி, நேற்று நடந்தது. சேலம், கரூர், ஈரோடு, கோயம்புத்துார், சென்னை என, தமிழகத்தில் உள்ள, 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கராத்தே போட்டியில், 20, 30, 40, 50 என எடைக்கு ஏற்றார் போல், ஜீவன் கட்டா, குரூப் கட்டா, வெப்பன் கட்டா என பல்வேறு பிரிவிகளில் போட்டி நடந்தது.
ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பெற்றனர். 2ம் பரிசை சேலம் மாவட்ட மாணவர்கள் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில், பள்ளி தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தலைமை பயிற்சியாளர் சரவணன், பயிற்சியாளர்கள் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.