ஜெகபர் அலி கொலை வழக்கில் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கலாம்; சி.பி.சி.ஐ.டி.க்கு கோர்ட் அனுமதி

புதுக்கோட்டை; ஜெகபர் அலி கொலை வழக்கில் கைதாகி உள்ள 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.,க்கு அனுமதி அளித்துள்ளது.



புதுக்கோட்டையில் சட்ட விரோதமாக நடைபெற்ற கனிமவளக் கொள்ளை, கல்குவாரிகளுக்கு எதிராக அதிமுக நிர்வாகியும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி போராடி வந்தார். கடந்த ஜன.17ம் தேதி கனிம வள கொள்ளையர்களால் இரண்டு முறை லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.


இந்த சம்பவத்தில் குவாரி உரிமையாளர்கள் ராசு,ராமையா, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தன், டிரைவர் காசி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந் நிலையில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் உள்பட 5 பேர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.3) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரை 3 நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

Advertisement