சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., எம்.பி.க்கள் 40 பேர் வலியுறுத்தல்

4

புதுடில்லி: ஜனாதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.



பார்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கடந்த (ஜன.) 31ம் தேதி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும் போது ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவர் பாவம் என்று கூறினார்.


சோனியாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடி, மூத்த பா.ஜ., தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையும் சோனியா பேச்சை கண்டித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தது.


இந்நிலையில் ஜனாதிபதியை பாவம் என்று கூறிய சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர். இது தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த 40 எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர், துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா தலைவருமான ஜக்தீப் தன்கரை சந்தித்தனர்.


அவரிடம் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.


உயரிய பதவியின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளை சோனியா பயன்படுத்தி இருப்பதாக அவர்கள் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

Advertisement