மாஸ்டர்ஸ் லீக்: கெய்ல் பங்கேற்பு

மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் பங்கேற்கிறார்.

இந்தியாவில், வரும் பிப். 22 - மார்ச் 16ல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் முதல் சீசன் நடக்க உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை, ராஜ்கோட், ராய்ப்பூரில் நடக்கவுள்ளன.

இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிறிஸ் கெய்ல் களமிறங்க உள்ளார். இதேபோல தென் ஆப்ரிக்காவின் நிடினி, இங்கிலாந்தின் மான்டி பனேசரும் விளையாட உள்ளனர். சமீபத்தில், சச்சின் தலைமையிலான இந்திய அணிக்காக 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் பங்கேற்பதை உறுதி செய்திருந்தார்.
கெய்ல் கூறுகையில், ''சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க இருப்பது மகிழ்ச்சி. இத்தொடரில் 'யுனிவர்சன் பாஸின்' முழுத்திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்,'' என்றார்.


நிடினி கூறுகையில், ''இத்தொடரின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. தவிர என்றும் மறக்க முடியாத தொடராக அமையும் என உறுதியளிக்கிறேன்,'' என்றார்.

Advertisement