மந்தகதியில் அங்கன்வாடி மைய பணி ஓராண்டாக அல்லல்படும் குழந்தைகள்

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது சக்கரமநல்லூர் கிராமம். இங்கு அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடித்து அகற்றப்பட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-- - -24ம் ஆண்டு, 13 லட்சத்து 57,000 ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

கடந்தாண்டு ஜனவரியில் கட்டடம் கட்டும் பணி துவங்கி ஓராண்டாக நடந்து வருகிறது. இக்கட்டடப் பணி இழுப்பறியில் நடந்து வருவதாகவும் இதனால் குழந்தைகள் அடிப்படை வசதியில்லாத கட்டடத்தில் பயின்று வருவதாகவும், பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

தற்போது, அங்கன்வாடி மையம், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அங்கு, குழந்தைகளுக்கு போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதியில்லை. இதனால் அவர்கள் அல்லல்படுகின்றனர்.

இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சமாக உள்ளது. தற்போது, புதிய கட்டடம் கட்டும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அங்கன்வாடி மைய கட்டடப் பணி, 80 சதவீதம் முடிந்துள்ளது விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement