மணிப்பூர் கலவரத்துக்கு முதல்வர் காரணமா? ஆடியோவை ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவு!

புதுடில்லி : மணிப்பூர் கலவரங்களுக்கு அம்மாநில முதல்வர் பைரேன் சிங் காரணம் என்ற ஆடியோ வெளியான நிலையில், அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு, 2023 மே மாதத்தில் கூகி - மெய்டி சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.


மனு தாக்கல்





அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவர சம்பவங்கள், 10 மாதங்களுக்கு மேலாக நீடித்தன.

கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறை சம்பவங்களில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. கூகி சமூகத்தினர் மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது.

மணிப்பூர் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் வன்முறையை துாண்டியதாக கூறி, கூகி சமூகத்தின் ஒருங்கிணைப்பு குழு ஆடியோ ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்.03) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த பூஷன், “ட்ரூத் லேப்ஸ் என்ற தனியார் தடயவியல் நிறுவனம் நடத்திய சோதனையில், ஆடியோவில் உள்ள குரல் பைரேன் சிங் குரலுடன் 93 சதவீதம் பொருந்துகிறது,” என்றார்.


சோதனை





இதற்கு மறுப்பு தெரிவித்த சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆடியோ டேப்புகளை மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்த வேண்டும்,” என, கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'பைரேன் சிங் பேச்சு உள்ளதாக கூறப்படும் டேப்புகள், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

'மார்ச் 24ல், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும்போது, ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement